கருப்பு பணம் பதுக்குவதில் இந்தியர்கள் முதலிடம் : விக்கிலீக்ஸ்

10:20 PM 0 Comments A+ a-

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பல்வேறு அரசு, ராணுவ ரகசியங்களை தனது ‘விக்கிலீக்ஸ்’ இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் அசாஞ். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியது: சுவிட்சர்லாந்து வங்கிகளுக்கு சொந்தமாக பல்வேறு நாடுகளில் உள்ள கிளைகளில் கருப்பு பணத்தை முதலீடு செய்தவர்களின் பட்டியல் எங்களுக்கு கிடைத்துள்ளது.


அதில், மற்ற வெளிநாட்டினரைவிட இந்தியர்களின் பெயர்கள் அதிக அளவில் உள்ளன. அவர்களில் சிலரது பெயர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மேலும் பலரது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அது எப்போது வெளியாகும் என இந்தியர்கள் ஆவலுடன் உள்ளனர். அவர்களது நம்பிக்கை வீணாகாது. அடுத்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.


பல ஆயிரம் கோடியை இந்தியர்கள் வெளிநாட்டில் முதலீடு செய்திருப்பதால், இந்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனினும், கருப்பு பணத்தை மீட்பதில் இந்திய அரசு மெத்தனமாக இருந்து வருகிறது. ஜெர்மனி அரசு, கருப்பு பணத்தை மீட்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதுபோல இந்திய அரசும் கூடுதல் கவனம் செலுத்தி கருப்பு பணத்தை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள இந்தியர்கள் அடங்கிய பட்டியலை வெளியிடக் கூடாது என இந்திய அரசு எங்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது கவலை அளிக்கிறது. இதுதவிர, பல வங்கிகள் எங்கள் மீது வழக்கு தொடுத்துள்ளன. எனினும் இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை. இவ்வாறு அசாஞ் தெரிவித்தார். அசாஞ்சின் அறிவிப்பால் கருப்பு பணத்தை மீட்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என தெரிகிறது. எனினும், 'அசாஞ்சின் கருத்து ஆதாரமற்றது' என சுவிஸ் வங்கிகள் கருத்து தெரிவித்துள்ளது.


வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரி வருகின்றன. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.