ஸ்பெக்ட்ரம் ஊழலின் குறுக்கு வெட்டு தோற்றம்
ஸ்பெக்ட்ரம் ஊழலின் நேரடி பின்விளைவுகள் ?
மக்களின் தொலை தொடர்பு கட்டணத்தில் ஒவ்வொரு அழைப்புக்கும் 40 பைசா கூடுதலாக செலவாகும். உங்கள் மாத மொபைல் பில் 500 ரூபாய் என்றால் உண்மையில் நீங்கள் கட்டவேண்டிய தொகை 100 மட்டுமே. 400 ரூபாய் அதிகம் செலுத்துகிறீர்கள்.
அரசுக்கு வருவாய் இழப்பு ஒரு லட்சம் கோடிக்கும் மேல். தற்போதைய விலைவாசி உயர்வை இந்த ஒரு லட்சம் கோடியின் மூலம் கணிசமாக குறைத்திருக்க முடியும். நாட்டின் வளர்ச்சி திட்டங்களை விரைந்து முடித்திட இது பெரும் உதவியாய் இருந்திருக்கும். இன்னும் எண்ணற்ற காரியங்களை இதன் மூலம் சாதித்திருக்கலாம்.
ஸ்பெக்ட்ரம் ஊழலின் மறைமுக பின்விளைவுகள்?
எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு என்பது நாட்டின் பிரதமரை கூட விலைக்கு வாங்க முடியும் என்ற அளவில் முடிந்திருக்கிறது. இந்தியா போன்ற மாபெரும் சந்தை பொருளாதாரம் கொண்ட ஒரு நாடு, வல்லரசாக வலுப்பெருவதில், வளர்ந்த நாடாக மாறுவதில் இது ஒரு பெரும் தடை கல். பணம் தின்னும் காக்கை கூட்டத்திற்கு இந்தியா உணவாக எளிதில் மாறக்கூடும். ஏற்கனவே மாறிவிட்டதென்றாலும் முழுதாக மாற வில்லை. முழுவதும் இரையாக இது ஒரு முக்கிய காரணமாக இருக்க கூடும்.
இதுவே நமது தேசப்பாதுகாப்பிலும் எதிரொலிக்கும். எங்கும் ஓட்டை எதிலும் ஓட்டை என்றால் மக்களுக்கு மிஞ்சுவது என்று எதுவும் இருக்காது. ஊழல் மிகுந்த, கட்டுபாடற்ற சமூகம் புரட்சிக்கு மக்களை இட்டுசெல்லும். அது நாட்டிற்கும் நல்லதல்ல, மக்களுக்கும் நல்லதல்ல. உண்மையில் இந்தியா ஒரு மாபெரும் கலவரத்திற்கும், பெரும் உயிர் சேதத்திற்கும் தன்னை அறியாமல் தயாராகி கொண்டிருக்கிறது. அந்த கலவரமும் நீண்ட காலம் நடக்க கூடியதாக இருக்கும். அது காலம் தாழ்த்தப்பட்டு கொண்டே வந்தது. இந்த ஊழலின் பின் விளைவுகள் அதனை வேகபடுத்தும். இது போன்ற எண்ணற்ற புரட்சிகளை வரலாற்றில் சான்றாக காணலாம். அடிப்படை காரணம் ஒன்று தான். ஊழலும் சுரண்டலும் சர்வாதிகாரமும் கொண்ட ஆட்சியாளர்கள் மட்டுமே. மற்ற இரண்டும் இருந்தாலும் இந்தியாவில் முழு அளவிலான சர்வாதிகாரம் இல்லாததே மக்கள் புரட்சியை தள்ளிபோடுகிறது.
ஊழல் அரசியல்வாதிகளின் நிலை மட்டும் எப்போதும் பாதுகாப்பாக உள்ளதே?
அது உண்மை இல்லை. அளவுக்கு அதிகமாக ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் தங்களுக்கு தாங்களே சவக்குழி தோண்டி கொள்கிறார்கள். இன்று ஐரோப்பிய நாடுகளில் ஊழலும் சுரண்டலும் மிக மிக குறைவு. அவர்களின் வரலாற்றில் அதை ஆட்சியாளர்கள் மூன்று நூற்றண்டுகளுக்கு முன்பே செய்து பார்த்து, அதனால் விளைந்த புரட்சிக்கு பூண்டோடு குடும்பத்தை காவு கொடுத்து, சுரண்டப்பட்ட சொத்து மொத்தத்தையும் மக்களுக்கே கொடுத்துவிட்டு நாட்டைவிட்டே ஓடிய கதை ஏராளம். அவை இன்றைய ஆட்சியாளர்களுக்கு பாடம்.
ஏன் நம்ம நாட்டிலேயே ஊர் ஊருக்கு ஜமீன் ராஜாக்கள் மக்களை சுரண்டி வாழ்ந்துகொண்டு, ஆங்கிலேயர்களுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு தானே இருந்தார்கள். என்ன ஆயிற்று இன்று. 99.99 சதவித ராஜாக்களின் பரம்பரை அட்ரஸ் இல்லாமல் போனது தானே உண்மை. அவர்களின் சொத்துக்கள் நாட்டுடமையாக்கபடவில்லையா? இது தான் இன்றைய ராசாக்களுக்கும் பொருந்தும். நடுத்தெருவுக்கு அவர்களின் பரம்பரை வந்து கஷ்டப்படும்.
புதுகோட்டை தொண்டைமான் பரம்பரை என்று சொன்னால் பச்சத்தண்ணி கூட கொடுக்கமாட்டார்கள் என்று இன்றைய வம்சாவளிகள் அதை சொல்வதில்லையாம். என்று நான் முன்பு ஒரு முறை படித்த பத்திரிக்கை செய்தி தான் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. பெருங்குடும்பமும், எண்ணற்ற சொத்துக்களும், எல்லையற்ற தொழில்களும் கொண்டு வானளாவ இருந்தாலும் இன்றைய அரசியல் பெருச்சாளிகள் இந்த நிலைக்கு தான் தள்ளப்படுவார்கள்.